செபமாலை விண்ணகம் செல்வதற்கான படிக்கட்டு
மானுடம் பாவத்தின் பிடியில் வீழ்ந்த நாள் முதல் இறைவன் இவ்வுலகை மீட்க இறைவாக்கினர்களை அனுப்பி வந்தார். இறுதியாகத் தன்னுடைய ஒரே மகன் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்ப, தூய்மை நிறைந்த லீலி மலராகிய அன்னையை நாடியபொழுது, அன்னை மரியாளைக் கண்டுகொண்டார். அவர் வழியாக இயேசு இவ்வுலகில் பிறந்து, இறையாட்சியைப் பறைசாற்றினார்.
இறைவனின் தாயாகிய அன்னை மரியாள் செபமாலை வழியாக நம்மை இயேசுவோடும், இறைவனோடும் இணைக்கும் பாத்திரமாக உள்ளார். இன்று நாம்னைவரும் செபமாலையைக் கொண்டு செபிக்கிறோம். செபமாலை என்பது என்ன என்பதை இந்தக் கட்டுரையின் மூலமாக அறிந்து கொள்வோம்.
செபமாலையும் மூலமாக நாம் தந்தையோடு இணைந்து அன்னை மரியாளை வாழ்த்துகிறோம். கடவுள் அன்னை மரியாளைத் தேர்ந்தெடுத்தபோது “அருள் நிறைந்த மரியே வாழ்க, ஆண்டவர் உம்முடனே” என்ற கடவுளுடைய வாழ்த்துச் செய்தியானது கன்னி மரியாவுக்கு அனுப்பப்படுகிறது. ஆகையால் நாம் செபமாலையில் அருள் நிறைந்த மரியே எனச் செபத்தைப் பலமுறை சொல்லிச் செபிக்கின்றபொழுது தந்தையாகிய கடவுளோடு இணைந்து செபிக்கிறோம் என்பதை மறக்கவேண்டாம்.
செபமாலையின் மற்றொரு சிறப்பம்சம் இயேசுவை மையமாகக் கொண்ட செபமாகப் பக்தர்களால் செபிக்கப்படுகிறது. ஆகையால் இது அன்னையை வாழ்த்தும் செபமாக மட்டுமல்லா இயேசுவைப் புகழும் செபமாக உள்ளது என்பதை இந்தச் செபத்தில் வருகின்ற நான்காவது அடியாகிய, “உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே” என்ற வரி நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
நாம் செபமாலையில் செபிக்கும் அமைப்பானது சிலுவையிலிருந்து வருகின்ற மணிகளிலிருந்து விரிந்து மீண்டும் சிலுவையை நோக்கி இணைகின்ற மணிகளால் நிறைவடைகிறது. இது நமக்குச் சொல்லும் செய்தி என்னவென்றால் சிலுவையிலிருந்து நாம் தொடங்கும் செபமானது சிலுவையை நோக்கி நிறைவு பெறுவதாகும்.
மறைந்த திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர் செபமாலை பக்தியை அதிகமாகக் கொண்டவர். எனவே அன்னையின் மீதுகொண்ட பக்தியினால் “செபமாலை மற்றும் மறையுண்மைகள்” என்ற புத்தகத்தை வெளியிட்டார். இவர் செபமாலையை நெய்தல் ஆடையோடு ஒப்பிடும்பொழுது குறுக்கல் நெடுக்கலாக நூல்கள் எவ்வாறு பின்னிப் பிணைந்து உருவாக்கப்படுகிறதோ, அதுபோலச் செபமாலை வாய்வழி செபம், மனவலி செபம் உருவாக்குகிறது என்கிறார்.
இயேசு சபை துறவியான பெஸ்கி என்கிற வீரமாமுனிவர் என்பவர் செபமாலை என்பது “மானிடர்களை மீட்க வானவர் விடுகின்ற வடமே” என்றும் செபமாலை வழியாக நாம் விண்ணுலகை அடையமுடியும் எனக் கூறுகிறார்.
செபமாலை விண்ணகம் செல்வதற்கான இருபது படிக்கட்டுகளாகிய இருபது கிறிஸ்துவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ள மறையுண்மைகள் என அழைக்கப்படுகிறது.
அருட்சகோதரர் லியோபின் குமார்.