கடவுளே தந்தை
ஒரு மனிதனை உருவாக்கி, அவனை வளர்த்துப் பராமரிப்பதுதான் தாய் தந்தையின் கடமை என்று சொல்வார்கள். தாய் தந்தையர்கள் மூலமாகத்தான் குடும்பம் உருவாகிறது. குடும்பம் என்ற சொல் இறைவனின் பராமரிப்பின் வெளித்தோற்றமாகும். இறைவனின் அன்பு குடும்பங்கள் மூலமாக வெளிக்கொணரப்படுகிறது என்பது உலகின் எதார்த்த உண்மையாகும். ஆகவே இறைவனே நமது வானகத் தந்தையாவார். இவர் வழியாக நமக்கு எல்லாம் அருளப்படுகிறது என்பதே உண்மையாகும்.
இவ்வுலகம் கடவுளால் தொடங்கப்பட்டுக் கடவுளால் முடிவுறும், ஆகையால் உலகில் உள்ள அனைத்து மாந்தர்களும் வானகத் தந்தையை அப்பா என்று உரிமையோடழைக்கும் பேறுபெற்றவர்கள் ஆவர். இவ்வுரிமையை நமக்கு இயேசு நாதர் கற்பித்தார். இயேசு வாழ்ந்த காலத்தில் எவ்வொரு மனிதர்களும் கடவுளைத் தந்தை என்றழைக்கும் உரிமை மறுக்கப்பட்டது, கடவுள் என்ற நாமத்தை உச்சரிக்கவே அனுமதி மறுக்கப்பட்ட இவ்வேளையில், யூதச் சமுதாயத்தின் சட்டமரபை முறித்து, கடவுளைத் தந்தையென்று அழைக்கக் கற்பித்தார். இதுவே கிறித்தவச் சமயத்தின் சிறப்பம்சமாகும்.
நமது கடவுள் எதிர்பார்ப்பவர். நம்மைப்போல் ஏக்கங்கள் உடையவர் ஆவார். ஆனால் அவருடைய ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் நம்முடைய எதிர்ப்பார்புகளைவிட சற்று வித்தியாசமானவை. அவருடைய எதிர்பார்ப்பை இறைவாக்கினர் எரேமியா (3:19) இறைவன் தன்னை அப்பா என்று அழைக்கமாட்டார்களா என ஏங்குவதாகக் குறிப்பிடுகிறார். ஆகவே இறைவனை எப்பொழுதுமே அப்பா, அப்பா என்றழைக்கக் கடமைப்பட்டவர்கள். பலவேளைகளில் அப்பா என்ற நாமத்தை நம்முடைய வேதனையான சூழ்நிலைகள் மறந்துவிடச் செய்கிறது. இந்நிலை கடவுளால் வருவதில்லை, மாறாகச் சாத்தானின் முயற்சியால் வருபவையே, ஆகையால் நாம் வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும் கடவுளை அப்பா தந்தையென்று அழைக்கக் கடமைப்பட்டவர்கள். எசாயா இறைவாக்கினர் 64-ஆம் அதிகாரத்தில் 8-ஆம் வசனத்தில் இறைவா நீர் எங்களது தந்தை மற்றும் குயவன், நாங்கள் உம்முடைய களிமண் என்று கூறி, கடவுளைத் தந்தை என்றழைப்பது வேதாகமத்தின் உண்மையாகும், மேலும் இதே எசாயா இறைவாகினர் இறைவன் ஆபிரகாமின் தந்தை என்றும் கூறுகிறார் (எசாயா 63 :16).
புனிதப் பவுல் உரோமயருக்கு எழுதிய மடலில் நாம் அனைவரும் இறைவனுடைய குழந்தைகள் என்ற உரிமையைக் கடவுள் கொடுத்திருக்கிறார் என்று கூறுகிறார் (உரோ. 8:14). இறைவனை நம்முடைய தந்தையென்று அழைக்கும் உரிமையைத் தூய ஆவியானவர் நமக்குத் தூண்டுகிறார் எனப் புனிதப் பவுல் அடிகளார் கொலோசையருக்கு எழுதிய திருமடலில் கூறுகிறார்.
நாம் இறைவனைத் தந்தை என்றழைக்கும்பொழுது, நம்முடைய படைப்பின் முழுமை அர்த்தம் பெறுகிறது. நம்முடைய சவால்கள் எளிதாகுகின்றது, நம்முடைய வேதனைகள் மகிழ்ச்சியாக மாறுகிறது, அதுவே சாத்தானுக்குத் தோல்வியை ஏற்படுத்துகிறது. எனவே இறைவனைத் தந்தை என்றழைப்போம் சாத்தானை வென்றிடுவோம்.
அருட்சகோதரர் லியோபின் குமார்.